இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக!

“சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். ஒரு மின்னிதழில் இத்தகைய குறிப்புகளைப் படித்த பொழுது அந்த இதழைக் கண்டித்து எழுத எண்ணினேன். பிறகு பார்த்த பொழுது தனிப்பட்டவர்கள் வெளியிட்டுள்ள  சமையல் குறிப்புகளிலும் அழகுக்குறிப்புகளிலும் இந்திக் கலப்படம் இருப்பதைக் காண்கிறேன். முன்பெல்லாம், சால்ட்டு, சுகர், பின்னர், ஆனியன், இலெமன்  என ஆங்கிலத்தைக் கலந்தனர். அதனை முறியடிக்க இயலாத பொழுதே இப்பொழுது இந்தியைச் சரளமாகக் கலந்து வருகின்றனர். உணவில் – உண்ணும் பொருள்களில் கலப்படம் கூடாது என்கிறோம். அவ்வாறிருக்க உணவு முறையைப்பற்றிச் சொல்லும் குறிப்புகளில் நஞ்சைக் கலக்கலாமா?

 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும் என வலியுறுத்தினார். அவர்,

“தமிழ்ப் பெருமக்களே! உண்ணும் உணவினும் உயர்வாக மொழியைக் கருதி அதனைக் காக்கும் தொண்டில் ஒன்றுபடுவீர்களாக! வளர்ந்து வரும் இந்தி முதன்மை வளரும் நம் செந்தமிழை அழித்தே தீரும். விழிமின்; எழுமின்; வேற்றுமையை மறந்து விழியினும் மேலான மொழியைக் காக்கப் புறப்படுமின்.(குறள்நெறி (மலர்1 இதழ்15): ஆடி 31 1995:15.8.1964)” என்றார். இன்றோ, உணவுக்குறிப்புகள் என்ற பெயரில் உயிரினும் மேலான தமிழை அழித்துக் கொண்டு வருகிறோம்.

எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம்.

“சுகர் பேசண்ட்சு” 

“முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு” 

“முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”, 

“முளைத்த மேத்தி ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால், ஃப்ரீ ரேடிக்கல்சு உருவாவதைத் தடுத்து”

“முளைத்த மேத்தியில் ஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற ஒளி வேதிப்பொருட்கள் உள்ளன”

“சப்பாத்தி அதே சாஃப்ட்… இந்த சின்ன ட்ரிக்சை ஃபாலோ பண்ணுங்க!”

“சாஃப்ட் சப்பாத்திக்கு சிம்பிள் டிப்சு”: “ஃகேர் ஃச்டைலின் படிப்படியான வழிமுறைகளைப் பாருங்கள்.”

“சக்திவாய்ந்த சூப்பர்ஃபுட்டான வெந்தயம்”

“சாஃப்ட்டான இட்லி” “முருங்கை இலை எல்த்தி… டேசுட்டி…” “குக்கரில் முருங்கை இலை கஞ்சி செய்முறை!”

“கசூரி மெத்தி”, “கசூரி மேத்தி” “கசுதூரி மேத்தி”

“மேத்தி1 டீசுபூன்” – “லெஃப்ட்-ல வுட்டா ரைட்-ல திரும்பிக்கும்”

“டேசுட்டியான நெல்லிக்காய் சாதம்”

“ஃகோம்மேட் காசல்(காஜல்) எப்படி செய்வது?” என்று ஒரு கட்டுரை. காசல் என்று நடிகை இருப்பது தெரியும். ஒருவேளை வீட்டிலேயே அவர்போல் ஒப்பனை செய்வது எப்படி என்று எழுதியிருப்பார்களோ என்று பார்த்தால் திரும்பத்திரும்பப் படித்தபின்தான் புரிந்தது, கண்மை பற்றிய கட்டுரை என்று.

இவை எல்லாம் எந்த நாட்டில் எழுதப்பட்டவை என்ற ஐயம் வருகிறதா? ஐயமே வேண்டா! மொழிக்கொலை மிகுந்தநாடு வேறு என்ன உள்ளது? தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ்இதழில் தமிழருக்கான குறிப்புகள் என்ற பெயரில் வருவனவே இவை.

ஒரு சமையல் குறிப்பில் வெள்ளை அரிசியில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து உணவு செய்யும்முறை இருந்தது. சோற்றில் கலக்காமல் அரிசியிலேயே கலந்து சமைக்கும் முறைபோல என்று எண்ணிப் படித்துப் பார்த்தேன். ஆனால் எந்த இடத்திலும் அரிசியைப் பாத்திரத்தில் அல்லது சமைப்பானில் அல்லது வாணலியில் இட்டு அடுப்பில் வைக்க வேண்டும் என்றோ வேறு வகையில் சமைக்க  வேண்டுமென்றோ குறிக்கப்பெறவில்லை.  பிறகுதான் புரிந்தது, அப்பெருமகனால் சோறு மறந்து ஒயிட் ரைசு கேட்டே பழகியவர் என. எனவே, அதைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணி வெள்ளை அரிசி என்றே எழுதி விட்டார். சோறு என்றுகூட எழுதத் தெரியாதச் சோற்றுப்பிண்டங்கள் சோறு வகைகளைப்பற்றி எதற்கு எழுத வேண்டும் என்றுதான் புரியவில்லை?

முருங்கை இலை, வெந்தய இலைபோன்று எல்லாம் குறிப்பிட்டுக் கீரைகளின் நன்மைகள், சமையல் முறைகளைத் தெரிவிக்கின்றனர். கீரையைக் கூட அறியாத இலைதழை தின்னும் கால்நடைகள் எதற்குக் கீரையின் நன்மைகளை நமக்குச் சொல்ல வேண்டும்?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!”

என்றார் பாரதியார்.

 “தமிழராகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபைகளிலேயும், தமிழராகப் பிறந்தோர் ஒருவருக் கொருவர் பேசும் போதும் இதர மொழிகளில் பேசாமல் தமிழே பேசும்படி முயல்கிறவன்   தமிழபிமானி” என்றார் பாரதியார். 

ஆனால், இன்றைக்குப் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் தமிழில் பிற மொழிச்சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதியும் பேசியும் வருகின்றனர்.

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான்,போவான், ஐயோவென்று போவான்.”

என்று சொன்னவர் பாரதியார்,

இந்திச்சொற்களை மட்டுமல்ல பிற மொழிச் சொற்கள் எவையாக இருந்தாலும் அவற்றைக் கலக்கும் அனைவரையும் அவற்றை வெளியிடும் அனைவரையும்தான் கண்டிக்கிறோம். தேசிய இனங்கள் நலன் கருதி, இவர்களுக்கு வாணாள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்.

பாரதியார் இன்றிருந்தால் “தமிழறியா முண்டங்களும் தண்டங்களும் தமிழில் எழுதுவானேன்” என்று கடுஞ்சினம் கொண்டிருப்பார்.

ஒன்றிய அரசின் கொள்கை இந்தித்திணிப்பை விரைவு படுத்த வேண்டும் என்பதற்காக இந்திச்சொற்களைப் பிற மொழிகளில் கலந்து பேச வேண்டும் என்பதே. தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தும் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா அவர்களும் பொது இடங்களில் இந்தியில் அல்லது இந்தி கலந்து பேச வேண்டும் என்று பேசுகிறார்.அதன் ஒரு  பாதைதான் ஊடகங்களில் இந்தியைக் கலப்பது. மூல காரணம் எதுவாக அல்லது யாராக இருப்பினும் தேசிய மொழிகளின் அழியும் போக்கைத் தடுக்க இந்திக் கலப்பை ஒவ்வொருவரும் தடுத்து நிறுத்த வேண்டும். பிற தேசிய மொழியினருக்கு முன்னோடியாக நாம் இன்றேனும் இந்தித்திணிப்பையும் இந்தியையும் கடுமையாக எதிர்ப்போம்.

தமிழ் மொழிப் பயன்பாட்டை எல்லா இடங்களிலும் காண விரும்பிய பாரதியார் இன்றிருந்தால், பின்வருமாறு சொல்லியிருப்பார்.

நாசமாய்ப்போக! நாசமாய்ப்போக!

இந்தி கலந்து எழுதுவோர் நாசமாய்ப்போக!

பிற மொழி கலந்து எழுதுவோர் அழிந்து போக!

தமிழ்மொழியை அழிக்கும் மொழிக் கலப்பர்

சுற்றம் சூழ ஓழிந்து போக! 

நம்மொழி தழைக்க அவர்கள் உடனே 

மண்ணோடு மண்ணாக மாறிப்போக!

– இலக்குவனார் திருவள்ளுவன்

1 thought on “இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக!”

  1. //சோறு என்று கூட எழுதத் தெரியாத சோற்றுப் பிண்டங்கள் சோறு வகைகளைப் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்றுதான் புரியவில்லை// – உண்மைதான் சமையல் குறிப்பிலும் பிற வகைக் காணொளிகளிலும் இந்தித் திணிப்பைக் காண முடிகிறது. ஆனால் அவற்றையெல்லாம் நான் பார்த்தது யூடியூபில். இதழ்களிலும் இப்படித்தான் வருகிறது என்பது அதிர்ச்சி!

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version