பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் நிறைந்தவையே. அறியாமையால் பலர் இவற்றைக் கற்பனை நிறைந்தனவாகவும் கடின நடை மிக்கன என்றும் எண்ணிக் கொண்டுள்ளார்கள். வீண்புகழ் பாடும் இன்றைய மக்களாட்சியை விட மக்கள் நலம் நாடிய மன்னர் ஆட்சி மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது. ஆதலின் அக்கால இலக்கியங்கள் மக்கள்நலம் நாடும் இலக்கியங்களாகத்தான் இருந்துள்ளன. அறவாழ்வு, பண்பாடு, நாகரிகம், ஆட்சிமுறை முதலான பல குறித்தும் பல அறிவுரைகள் இவற்றில் உள்ளன. இவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ஒரு வரித் தொடர்களாகத் தொகுத்துத் தர முயன்றுள்ளார் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள், அவரது வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் என்னும் நூலில்.
திருக்குறள், இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி ஆகிய நூல்களில் இருந்தும் தொடக்கத்தில் சில சங்க இலக்கியப் பாடல்களில் இருந்தும் நிறைவில் பாவேந்தர் பாரதிதாசனாரின் படல்களில் இருந்தும் கருத்துகளைத் திரட்டித் தந்துள்ளார்.
எளிய நடை என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருவருக்கு எளிமையாக இருப்பது மற்றவருக்குக் கடினமாக இருக்கும். படிக்கப் படிக்க எல்லாம் எளிமையே. ஆங்கிலத்தில் அகராதியைப் புரட்டிப் பார்த்து மட்டுமே பொருள் தெரிந்து கொள்ளக் கூடிய சொற்களைக் கையாண்டால் உயர்ந்த நடை என்று பாராட்டும் நாம், தமிழில் தெரியாத சொல் இருந்தால் “இப்படித் தெரியாத சொற்களைக் கையாளுவதால்தான் தமிழ் வளரமாட்டேன் என்கிறது” எனப் புராணம் பாடுகிறோமே தவிர, அதன் பொருள் அறியும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. எனவே பெரும்பாலும், பொதுவாக, எளிய முறையில் கருத்துகளைத் தொகுத்து இருந்தாலும் சில இடங்களில் நயம் கருதியோ சொல்லின் தேவை கருதியோ கையாண்ட சொல், புரியாததாக இருந்தால் அகராதி மூலமாகவோ கற்றறிந்தார் மூலமாகவோ அவற்றை அறிந்து கொள்ளலாம். அல்லது எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுவாக, நாம் ‘உலகப் பொன்மொழிகள்’ என்னும் தலைப்பில் பிற நாட்டு அறிஞர்களின் கருத்துகளைப் படிப்போமே தவிர, அவற்றைப் போலவும் அவற்றினும் சிறப்பாகவும் அவர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டு நல்லறிஞர் கூறியுள்ள கருத்துகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவ்வாறில்லாமல் இவற்றையும் உலகப் பொன்மொழிகள் வரிசையில் வைத்து மதித்துப் போற்ற வேண்டும்.எனவே, இலக்கிய அறிவுரைகளைப் பரப்ப வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்பதால் , தமிழுணர்வைப் புரிந்து கொண்டு படிப்போர் வரவேற்பர் என எண்ணுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில், வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் என்னும் நூலிலிருந்து மேற்கோள்கள்/அறிவுரைகள் படங்களாகப் பகிரப்படும். சிந்தனையைத் தூண்டும் இந்தச் சிறந்த மேற்கோள்களைப் பார்த்து, படித்து, உணர்ந்து, பகிர்ந்து பயன் பெறுங்கள்.